Sunday, November 18, 2007

தோழிக்கு ஒரு கடிதம்

தோழிக்கு ஒரு கடிதம்

அன்பு புனிதம்,
அண்ணியே எனக்குத் தோழியாக அமைந்தது மகிழ்ச்சி.
உங்களுக்கு தினமும் ஒரு மடல் எழுத ஆசை.
நேரு தன் மகளுக்கு எழுதிய கடிதங்கள் நினைவிற்கு வருகின்றதா?
அது ஒரு வரலாற்று நூலாக சுற்றுலா வருகின்றது.
தினமும் நாட்குறிப்பு எழுத விருப்பம்.
ஆனந்தரங்க டைரி நினைவிற்கு வருகின்றது.
எதற்கெடுத்தாலும் தயக்கம்.
பெரியவர்களை முன்னோடிகளாய் நினைத்து
தயக்கத்தை தூக்கி எறிந்துவிட்டேன்.
இப்பொழுது ஒரு நீண்ட தொடர் எழுத ஆரம்பித்திருக்கின்றேன்
“எண்ணங்களின் ஊர்வலம் “
நினைவுகள் -அப்பொழுது
எண்ணங்கள் - இப்பொழுதும்
எண்ணங்களில் நினைவுகள் அடக்கம்.
என்ன குழப்புகிறாளே என்று என்னைப் பார்ப்பது புரிகின்றது.
குழப்ப ஆரம்பித்துவிட்டேனா
அப்படியானால் பல அறிஞர்களின் வரிசையில் சேர்ந்து விட்டேன்
நினைவு இருக்கின்றதா?
இரண்டு அறிவு ஜீவிகள் கீழ்ப்பாக்கம் வீட்டில் தனிக் குடித்தனம்
நடத்தியது.
ஒரே வீட்டில் தனித் தனியாக வலம் வந்தோம்
சேர்ந்தும் இயங்கினோம்.
மீண்டும் குழப்புகிறேனா?
நாம் அறிவு ஜீவிகள்
நம் வாழ்க்கையில் நடந்தவைகளை
நாமே ஆய்வு செய்து மகிழ்ந்தோம்
மனிதன் சாதனைகளைச் செய்திருந்தால் மகிழ்ச்சி கிடைக்கும்.
நாம் இருவரும் சமுதாயக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.
நமக்கு இரத்த சம்பந்த உறவுகளைவிட
இதயப்பிணைப்பு உறவுகள் நிறைய.
நம் தனிக் குடித்தனம் நன்றாக இருந்தது.
ஆனால் கடமைகள் நம்மைப் பிரித்துவிட்டன.
சமீபத்தில் நாம் சந்தித்த பொழுது
நினைவுகளை அசை போட்டோம்.
நீங்கள் சொன்ன ஒரு வார்த்தை முதலில்
எனக்கு அதிர்சியைக் கொடுத்தது.
“குடும்பம் ஒரு புதைகுழி “
குடும்பத்தைவிட்டு வெளிவருவது கடினம்
புதைகுழியை விடச் சிறந்த உதாரணம் கூறமுடியுமா?
நுனிப்புல் மேய்பவளாய் ஒரு வினாடி இருந்துவிட்டேன்
என்ன இருந்தாலும் நீங்கள் தமிழ்க் குடும்பம், அதிலும்
சரித்திர ஆராய்ச்சி செய்பவர்களின் குடும்பம்.
டாக்டர். இராசமாணிக்கனார் உங்கள் மாமனார்.
கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் மா. ரா. இளங்கோவன் தங்கள் கணவர்
வரலாற்று ஆராய்ச்சியாளர் டாக்டர். கலைக்கோவன் உங்கள் மைத்துனர்
தமிழ் உலக ஆராய்ச்சியாளர் அரசும் உங்கள் மைத்துனர்.
சைவச் சித்தாந்தப் பழம் உங்கள் தந்தை.
உங்கள் பிறந்த குடும்பத்திலும் சரி,
புகுந்த வீடிலும் சரி, தமிழ்த்துறைப் பணியில்
இருப்பவர் அநேகர்.
உங்களிடம் தமிழ் பேசி என்னால் வெல்ல முடியாது.

No comments: